பட்டிமன்ற மாண்புகளும், தலை தூக்கும் முயற்சிகளும்....

மாணவி ஸ்ருதியின் எண்ணத் தெளிவையும், வார்த்தை வலிமையையும், ஆங்கில மொழி ஆளுமையும் கண்டு வியந்து இந்த பதில் மடலை அவருக்கு வரைகிறேன். தற்போது வைரமுத்து அய்யா அவர்களின் கட்டுரைத் தொகுப்பான “தமிழாற்றுப்படை” என்னும் புத்தகத்தை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தாக்கம் என்னை விட்டு அகலாததால், தமிழில் எழுத கைகள் துடிக்கின்றன. எனவே, அவருக்கு தமிழிலேயே பதில் வரைகிறேன். ஸ்ருதி அவர்கள், என் முந்தைய கட்டுரைக்கு மிகத் தெளிவாக பதில் அளித்திருந்தார். அதில் அவர் பட்டிமன்ற மரபைப் பற்றியும், பட்டிமன்றத்தின் மாண்பைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்து விளக்கியிருந்தார். உண்மை பகிர வேண்டுமானால் நான் இதுவரை எந்த பட்டிமன்றத்திலும் பேசியதில்லை. எந்த பட்டிமன்றப் போட்டியிலும் பேசி பரிசு பெற்றதில்லை. எனவே இவை அனைத்தும் எனக்கு மிகப் பெரிய படிப்பினையாகவே அமைகின்றன. இன்று காலை மாணவி எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஓர் குறுந்தகவலை அவருக்கு அனுப்பனேன். அதற்கு பதில் அளிக்கும்போது மாணவி, “என் கருத்துக்களுக்கு சம மதிப்பு கொடுத்து அவற்றை கேட்டதற்கு நன்றி” என்று பதிலளித்தார். அதைப் படித்து நான் திகைத்தேன். கருத்துப் போர்களும், விவாதங்களும், அன்றாட வாழ்கையின் ஒரு பகுதியாக இருந்த தமிழ் நாட்டில் இந்த நிலையா? “நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!” என்று அந்த பரமசிவனையே பார்த்து அறைகூவிய முப்பாட்டன் நக்கீரன் வாழ்ந்த பூமியில் கருத்தை காதுகொண்டு கேட்டதற்கு நன்றி பகிர்வதா? இந்த நிலை என்று மாறுமோ என்ற கேள்வியும் மனதில் எழ, இந்த பதில் கட்டுரை மூலம் ஸ்ருதி அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது, “உங்கள் கருத்துக்களை கேட்பதோடு மட்டும் நிற்காமல், அவற்றிற்கு மதிப்பும் அளிக்கிறேன். அந்த மதிப்பின் நீட்ச்சியே இந்த பதில் கட்டுரை. தங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. அவற்றை வெளிப்படையாக பேசத் தயங்க வேண்டாம். இது தமிழ் வளர்த்த மண். இங்கு கருத்துக்கும் சுதந்திரம் உண்டு, கருத்து கூறுபவரின் வாக்குக்கும் சுதந்திரம் உண்டு.”

ஒரு பட்டிமன்றம் எப்படி இருக்க வேண்டும் என்று ஸ்ருதி கூறியுள்ளதிலிருந்து நான் நிரம்ப கற்றுக்கொண்டேன். அந்த கருத்துக்கள் அழகாகவும் ஆழமாகவும் உள்ளன. அவற்றில் என்னை சிந்திக்க வைத்த இரண்டு கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முதல் கருத்து, பட்டிமன்றங்கள் ஒரு கூற்றின் பல கோணங்களை ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைய நம்மைத் தயார் செய்கின்றன. எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு வாதத்திற்காக என்னைப் பேசச்சொன்னாலும், அந்த வாத்தின் அடி ஆழம் வரை தோண்டி சென்று, ஆராய்ந்து, தெளிவு பெற்று அதைப் பற்றி புரிந்துகொள்ள அந்த ஆராய்ச்சியே என் எண்ணங்களை விரிவடைய செய்கின்றது. இரண்டாம் கருத்து, ஒரு நல்ல பட்டிமன்றப் போட்டிப் பேச்சாளர், பங்கு பெறுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அந்த போட்டியின் தீர்வு என்ன என்பதில் அதிக கவனம் செலுத்துதல் கூடாது. இவை இரண்டுமே முத்து தெரித்தாற்போல் எழுதப் பட்ட இரத்தினப் பரல்கள். இந்த வாக்குகளை சற்றே ஆராய்ந்து அவற்றில் உள்ள உண்மையையும், நாங்கள் நடத்தும் பட்டிமன்ற போட்டியில் இவற்றை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதையும் நான் இந்த கட்டுரையில் எழுத விழைகிறேன். 

எந்த ஒரு தகவலையும் திறனாய்ந்து புரிந்துகொள்ளுதலை ஆங்கிலத்தில் critical thinking என்று குறிப்பிடுவார்கள். அந்த திறனாய்ந்து புரிந்துகொள்ளும் திறமை ஒவ்வொரு மருத்துவ மாணவ/மாணவிக்கும் அவசியம் தேவை. சமீபத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் “ஏன்” என்ற கேள்வி கேட்டு பதில் கூறும் விளையாட்டு ஒன்றை விளையாடினோம். அந்த விளையாட்டின் போதுதான் “ஏன்” என்ற கேள்வி கேட்பதும் அதற்கு பதில் அளிப்பதும் எவ்வளவு கடினம் என்று உணர்ந்தோம். உதாரணம் ஒன்று கூறினால் இது தெளிவாக புரியும். அந்த விளையாட்டில் “ஒரு முப்பத்தைந்து வயது ஆண், இரு சக்கர வண்டி ஓட்டும்போது விபத்துக்குள்ளாகி, தலையில் படுகாயம் அடைந்து இறந்துவிட்டார்” என்று ஒரு வாக்கியம் கொடுத்துவிட்டோம். அதற்கு “ஏன்” என்று கேட்டுக்கொண்டே, பதில் கூறிக்கொண்டே போகவேண்டும். ஏன் இறந்தார்? தலையில் படுகாயம். ஏன் தலையில் படுகாயம்? தலைக்கவசம் அணியவில்லை. என் தலைக்கவசம் அணியவில்லை? தலை முடி அழகு கலைந்து விடும். ஏன் தலை முடி அழகு முக்கியம்? ----- இது வரை கேட்ட கேள்விகளுக்கு எளிமையான பதில்கள் வந்துவிட்டன, இதற்கு மேல் “ஏன்” என்ற கேள்வியும் கடினமாயின, பதிலும் கடினமாயின. --- தலை முடி அழகு ஆண்மையின் அடையாளம். ஏன் அது ஆண்மையின் அடையாளம்? இதற்கு மேல் “ஏன்” என்ற கேள்வியை கேட்கவும் கடினமாக இருந்தது, பதிலுமில்லை. இந்த விளையாட்டின் போதுதான் நான் திறனாய்தல் எவ்வளவு கடினம், நம் மாணவர்களுக்கு அதிகப்படியாக நாம் அதைக் கற்றுத்தருவதில்லை என்று புரிந்துகொண்டேன். இப்போது பட்டிமன்றத்திற்கு வருவோம். மாணவி ஸ்ருதியின் கூற்றுப்படி திறனாய்ந்து தெளிதலே பட்டிமன்றத்தின் சிறப்பு என்றால், திறனாய்தலை பயிற்றுவித்தல் அவசியம். 

ஒரு மாணவருக்கு என்ன படிக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்றால் அவர் எப்படிப் படிப்பார்? கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு முக்கியமாக சொல்லிக் கொடுக்கப்படும் நுழைவுப்பாடம், “எதை நீங்கள் கற்பிக்க வில்லையோ அதைப் பரிசோதிக்காதீர்கள்.” நம் மாணவர்களுக்கு திறனாய்வை நாம் கற்பிப்பதில்லை என்பதே உண்மை. அப்போது அவருக்கு “திறனாய்வு என்று ஒன்று உள்ளது ராசா/ராசாத்தி – சென்று அதைக் கற்றுக்கொண்டு போட்டியில் களமிறங்குங்கள்” என்று கூறவேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அதையும் தாண்டி திறனாய்வது எப்படி என்றும் அவசியம் கற்பிக்க வேண்டும். அதற்கு நேரமும், அங்கீகாரமும் இல்லாத காரணத்தால், அப்படி ஒன்று உள்ளது, அதைப்பற்றி தெரிந்துகொள் என்று சொல்வதாவது அவசியம் என்று தோன்றுகிறது. அப்படி முன்கூட்டியே சொல்லிவிடுவது இயற்கையான அவர்களின் திறமையை பாதிக்கும் என்பது செயற்கையான ஒரு கவலை என்று எண்ணுகிறேன். ஸ்ருதியுடைய சக மாணவர் ஒருவர் கூறினார், “+2 தேர்வில் முன்பெல்லாம் blue print என்று ஒன்று தருவார்கள். அதில் எந்த பாடத்திலிருந்து எத்தனை மதிப்பெண்கள் கேள்விகள் வரும் என்று முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். இது அதைப்போன்ற ஒரு செயல்” என்றார். தேர்வின் கேள்விகள் எந்த பாடத்திலிருந்து வரும் என்று முன்னரே அறிவிப்பதற்கும், மதிப்பெண் விதிகளை கூறுவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. தேர்வின் blue print வெளியிடுவதன் மூலம் இதைப் படி, இதைப் படிக்காதே என்று கூறிவிடுகிறார்கள். ஆனால் மதிப்பெண் விதிகளை வெளியிடுவதில் கருத்தை திணிப்பதில்லை, இப்படி சிந்தியுங்கள், இப்படி சிந்திக்காதீர்கள் என்றெல்லாம் கூறுவதில்லை. சிந்தனை, திறனாய்வு, கருத்தாழம் அவசியம் என்று தான் கூறுகிறேம். ஒருவரின் சிந்தனையை தடை படுத்துவது தான் பட்டிமன்றத்தின் மாண்பிற்கு எதிரானது. தங்களின் சிந்தனையும் திறனாய்வும் கண்டுதான் பரிசு அளிக்கப்படும் என்று கூறுவது எந்த விதத்தில் பட்டிமன்ற மாண்பை மீறுகிறது?

இரண்டாம் கருத்தை நான் மிகவும் விரும்புகிறேன். அது, “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.” என்ற கீதையின் சாரமாகும். இந்த கருத்தை உற்று நோக்கும்போது எனக்கு கவலை ஏற்படுகிறது. என் முந்தைய கட்டுரையில் நான் குறிப்பிட்ட சில மாணவர்கள் வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு உழைத்து முன்னுக்கு வரத் துடிப்பவர்கள். பல நேரங்களில் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையும், எதிர்பார்ப்புமே தீப்பந்தமாகி இருண்ட பாதைக்கு வழி காட்டுகின்றன. கடைமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பது பாரதப் போரில் தன் உணர்ச்சிகளால் கட்டப்பட்டு, வில் எந்த மறுக்கும் விசயனுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். போருக்கு வரவே வழியில்லாமல், சமூக அநீதிகளால் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, தள்ளி நிற்கும் ஏகலைவர்களுக்கு அது பொருந்துமா? கட்டை விரலை அறுத்து எனக்கு பரிசாகத் தந்துவிடு என்று கேட்கும் சமுதாயத்தில், கட்டை விரல் இல்லாத அந்த திறமைசாலிக்கு நாம் என்ன உதவி செய்யப் போகிறோம்? பலனை எதிர்பாராதே, அது உனக்குச் சொந்தமானது அல்ல என்று கூறித் தள்ளிவிடப் போகிறோமா? அல்லது, “கனவு காண், வெற்றிக்காக உழைப்பு செய், இந்த திசையில் உழைத்தால் வெற்றி நிச்சயம், வெற்றி கைக்கூடும்” என்று உற்சாகப்படுத்தப் போகிறோமா?

இறுதியாக நான் கூற விரும்புவது இதுதான். இந்த பட்டிமன்றத்தை ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் நான் நடத்தியிருந்தால் ஒரு வேளை, இந்த மாணவர்கள் சிந்திப்பது போலத் தான் நானும் சிந்தித்திருப்பேனோ என்னவோ, தெரியவில்லை. இப்போது உலகத்தை வேறு கண்ணாடிகள் அணிந்து பார்க்கிறேன். பெரியார் என்ற ஒரு கண்ணாடி, அம்பேத்கர் என்ற ஒரு கண்ணாடி, பாரதியார் என்ற ஒரு கண்ணாடி, இந்தக் கண்ணாடிகளின் மூலமே எனக்கு இன்று தெளிவு கிடைக்கிறது. இந்த கண்ணாடிகள் எனக்கு வேறு ஒரு உலகத்தைக் காட்டுகின்றன. சமத்துவம், சுயமரியாதை, மனித நேயம், பெண்ணுரிமை என்ற பல கோணங்களில் வெளிச்சத்தை சிதைத்து வண்ணங்களைக் காட்டுகின்றன. 

இந்த விவாதத்தைப் படித்த வேறு ஒரு மாணவி “தங்கள் குட்டி மீன்களை நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறோம்” என்று பதிலளித்திருந்தார். தேர்ச்சி பெற்ற பட்டி மன்றப் பேச்சாளர்களை முதலைகள் என்றும், புதிய, முதல் முறைப் பேச்சாளர்களை குட்டி மீன்கள் என்றும் உவமைப் படுத்தி எழுதியிருந்ததையே அவர் அப்படி கூறியிருந்தார். அவருக்கு ஒரு சிறிய கருத்து கூறி இந்த பதில் கடிதத்தை முடிக்கிறேன். எங்கள் குட்டி மீன்கள் நாளை வளர்ந்து உங்களை பயமுறுத்தப் போகிற திமிங்கிலங்கள் ஆகும். அவற்றுக்கு உங்கள் பாதுகாப்பு தேவை இல்லை. வளர தண்ணீரில் இடம் கேட்கிறோம். கடலில் கணக்கிலடங்கா உணவு உள்ளது, உங்களிடம் அவர்கள் உணவுக்கொடை கேட்டு வரவில்லை, இருப்பதை சாப்பிட வழி விடுங்கள் என்றுதான் கேட்கிறோம். 

நன்றி!

Comments

Popular posts from this blog

Social distancing…..you must be kidding me

Pride Month Guest Post - Being Visibly Queer in a medical college.

My Teacher