சிறப்பரிமை



சிறப்பரிமை

எங்கள் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். இது மாணவர்கள், மாணவர்களுக்காக நடத்தும் ஒரு கருத்தரங்கம். இந்த கருத்தரங்கத்தில் நுட்பமான ஒரு தொழிற்பட்டறையும், பட்டிமன்றமும், மாணவர்களின் ஆய்வு கண்டுபிடிப்புகளை அரங்கேற்றி களம் காணும் போட்டியும், மருத்துவ நெறிமுறைகள் சார்ந்த ஒரு சொற்பொழிவும் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கருத்தரங்கத்திற்கு தயார் செய்யும் சந்திப்பு ஒன்று இன்று மாலை நடை பெற்றது. அந்த சந்திப்பில் கருத்தரங்கிற்கு செய்ய வேண்டிய பல முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது மாணவர்களுக்கும் எனக்கும் இடையே மிகவும் உற்சாகமூட்டும் விவாதம் ஒன்று ஏற்பட்டது. அந்த விவாதத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன். அந்த விவாதம், என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். பகிர்வு ஊர்தியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நான், வீடு இருக்கும் இடம் வந்த பின்னரும் வண்டியிலிருந்த இறங்காமல் சிந்தனையில் ஆழ்ந்து வெகு தூரம் தள்ளிப் போய் இறங்கி, திரும்பி நடந்து வந்தேன். அப்படி நடக்கும்போதும் அதே சிந்தனை. வழிபாட்டு அறையில் மெதுவாக நிரம்பி வழியும் ஊதுபத்தி மணம்போல் என் மனம் முழுவதும் நிறைந்திருந்த அந்த எண்ண அலைகளை இங்கு வடிகட்டி பதிவிடுகிறேன். 


அது பட்டிமன்றம் நடத்தும் முறை பற்றிய ஒரு விவாதம். “பட்டிமன்றத்தில் பேசும் அறிஞர்களுக்கு தாம் எந்த அடிப்படையில் பரிசுக்கு உரியவராக தேர்ந்தேடுக்கப்படுவோம் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அதனால் மதிப்பெண் தரும் விதிகளை கூறிவிடவேண்டும்” என்று நான் கூறினேன். இதற்கு ஒரு மாணவி மாற்றுக் கருத்து கூறினார். அவர், “அப்படி முன்கூட்டியே அவர்களுக்கு விதிகளைக் கூறிவிட்டால், அதற்கேற்ப அவர்கள் தம்மை தாமே தயார் செய்துகொண்டு வருவார்கள். பட்டிமன்றத்தில் முக்கியமான ஒரு திறன், அந்த நேரத்திற்கேற்ப தன்னிச்சையாக பேசுவதாகும். அது தடைபட்டுவிடும்” என்றார். இப்படித் தான் அந்த விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை சரிவர புரிந்துகொள்ள பட்டிமன்றத்திற்கான விதிகள் என்ன என்று கூறுவது அவசியம். பட்டி மன்றத்திற்கான விதிகள்:

1.       முதலில் தகுதிச் சுற்று நடக்கும். அதற்கான தலைப்புகள் முன்கூட்டியே மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இதில் தகுதி பெறுபவர்கள் இறுதிச்சுற்றுக்குப் போவார்கள்.

2.       இறுதிச் சசுற்றுக்கான தலைப்பும் முன்னமே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

3.       சிறந்த பேச்சாளர் பரிசு மட்டுமே வழங்கப்படும். அதற்கு முதல் இடம் இரண்டாம் இடம் என்று இரண்டு பரிசுகள் உண்டு. அணிக்கு பரிசுகள் இல்லை.

4.       பரிசுத் தகுதிக்கான விதிகள், பேச்சுத் திறன், கருத்தாழம், பார்வையாளர்களைக் கவரும் தன்மை ஆகியவை. இதில் கருத்தாழத்திற்கே அதிக மதிப்பெண்.


கருத்தாழத்திற்குத் தான் அதிக மதிப்பெண். வெற்றி பெற விரும்பும் பேச்சாளர் கருத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று பங்கேற்பாளர்களிடம் சொல்லிவிடவேண்டும் என்பதே என் வாதம். அப்படி சொல்லி விட்டால் மாணவர்களின் இயற்கையான பேச்சாற்றல் வெளிவராது, அவர்கள் அந்த மதிப்பெண்ணுக்காக தம்மைத் தாமே தயார் படுத்திக்கொண்டு விடுவார்கள் என்பது மாணவியின் மாற்றுக் கருத்து. 


அப்படியே அவர்கள் தம்மைத் தாமே தயார் செய்துகொண்டு வந்தால் தான் என்ன? என் கருத்தை வலியுறுத்த குறிப்பிடத்தக்க ஒரு ஆய்வின் முடிவுகளைப் பற்றி இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். இங்கிலாந்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் கண்டறிய எண்ணியது, பள்ளி மாணவர்களை மின்சாரத்தை சேமிக்க வைப்பது எப்படி என்பது தான். மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தார்கள். ஒரு குழுவில் இருந்த மாணவர்களுக்கு மின்சாரம் பற்றியும், மின்சார சக்தி எப்படி உருவாகிறது, அது எவ்வளவு அறிய ஒரு சக்தி, அதை பாதுகாப்பது எப்படி போன்ற கருத்துகளை கற்றுத் தந்தார்கள். கற்றுத் தந்த பின் அவர்கள் மின்சாரத்தை செமிக்கிரார்களா என்று கண்காணித்தார்கள். அடுத்த குழுவினர் இருக்கும் அறைகளில் எல்லாம் “இந்த அறையை விட்டு செல்லும் போது விளக்கு மற்றும் மின் விசிறிகளை அணைத்து விட்டு செல்லவும்” என்று எளிய முறையில் எழுதி வைத்தனர். இவ்விரு அணிகளில் எந்த அணி அதிக மின்சாரம் சேமித்தது என்று நினைக்கிறீர்கள்? ஆம், இரண்டாம் அணிதான் அதிகமாக மின்சாரம் சேமித்தது. இந்த ஆய்வு நமக்கு மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்பிக்கிறது. மின்சாரம் பற்றி தீர அறிந்து கொண்டு அதன் பின் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வது என்பது ஒரு முறை. ஒரு சில எளிய விதிமுறைகளைக் கடைப்பிடித்து பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு அதன் பின் ஏன் இப்படி மாற்றினோம் என்று தெரிந்து கொள்வது ஒரு முறை. இதில் இரண்டாம் முறைக்கே அதிக சக்தி உண்டு. நிலை நிறுத்தத் தக்க மாற்றங்களை அதுவே கொணரும். பழக்க வழக்கங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் பலர் இதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். பழக்க வழக்கங்கள், அறிவு, திறன், கல்வி ஆகியவற்றின் மூலம் மாறுவதைக் காட்டிலும், உணர்வுகள், சுற்றுப்புறத் தூண்டுதல்கள், தேவைகள், ஆகியவற்றின் மூலமே அதிகமாக மாறுகின்றன. 


இதற்கும், பட்டிமன்றம் குறிந்த என் விவாதத்திற்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றும். அதற்கு விளக்கம் அளிப்பதும் என் கடமை. இந்த பட்டிமன்றத்தை வாழ்க்கையுடன் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற பல வழிகள் உண்டு. இயற்கையாகவே ஆற்றல் பெற்றவர் எளிமையாக அதிக பயிற்சி இல்லாமலேயே வெற்றி பெறுவதும் உண்டு. மிக்க திறன் இல்லாத எளியவர் கடின உழைப்பு மூலம் திறன் பெற்று வெற்றி அடைவதும் உண்டு. நீச்சல் பற்றி நன்று படித்தறிந்து, பயிற்ச்சி பெற்று நீச்சல் பழகலாம், அல்லது, ஒன்றுமே தெரியாமல் தண்ணீரில் குதித்து திணறித் திண்டாடி கற்றுக் கொண்டும் கரையேறலாம். ஆற்றல் பெற்றவரே பட்டிமன்றத்தில் போட்டியிடவேண்டும் என்றால், அவர்களுக்கு எந்த விதிமுறைகளும் தரவேண்டாம். அப்படியே அவர்கள் போட்டி போட்டுவெற்றி பெற்றுவிடுவார்கள். பட்டிமன்றம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு மாணவர், “பேசித்தான் பார்ப்போமே” என்று களத்தில் இறங்கினால், அவருக்கு பயிற்சி தேவைப்படுகிறது. முன் கூட்டியே அவர் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளவேண்டும். முதலைகள் விளையாடும் தடாகத்தில் முதல் முறை குடியேறும் குட்டி மீன் கவனமாகத் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டாமா? அப்படியிருக்க விதிமுறைகளை முன்கூட்டியே கூறிவிடுவது தானே முறை? உலகத்தின் பல புகழ் பெற்ற கலைஞர்கள் தற்செயலாகவே தத்தம் திறன்களைக் கண்டுகொள்கிறார்கள். முதலில் தெரிந்தோ தெரியாமலோ களம் இறங்கிவிடுகிறார்கள். பின் அதில் ஆர்வம் கொள்கிறார்கள், பயிற்சி பெறுகிறார்கள், தேர்ச்சி பெறுகிறார்கள், வெல்கிறார்கள். இதை உணர்த்தவே அந்த ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொண்டேன். இயற்கையாக திறன் கொண்டு வந்தால் தான் வெற்றி பெறவேண்டும் என்பதில்லை. வெற்றியைச் சுவைத்துவிட்டு, அந்த களிப்பில் மயங்கி, இது என்ன என்று கற்றுக்கொள்பவர்களும் உண்டு. 


சிறப்பரிமை என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுதல் அவசியம். இதை ஆங்கிலத்தில் privilege என்பார்கள். எளிமையாகக் கூறவேண்டுமானால் “கொடுத்து வைத்தல்”. நான் மிகவும் கொடுத்து வைத்த ஒரு பிறவி. ஆண் பாலினம், நல்ல பொருளாதாரம், கல்வி கற்றறிந்த பெற்றோர், நகர வாழ்க்கை, பெரும்பான்மை மதம், ”உயர்ந்த” சாதி, நல்ல கல்வி அறிவு, என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லா விதத்திலும் கொடுத்த வைத்த பிறவி. இப்படிப் பட்ட பிறப்பில் எனக்கு ஓட்டப்பந்தையத்தின் தொடக்கமே முடிவு கோட்டிற்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால் என்னைபோல கொடுத்து வைக்காத பிறவிகள் பலர் இந்த உலகில் உள்ளனர். என்னுடைய மற்றொரு மாணவர் தன் கதையை எனக்கு ஒரு நாள் கூறினார். அந்த கதை கேட்டு ஒரு வாரம் என்னால் தூங்கவும் முடியவில்லை, சாப்பிடவும் முடியவில்லை. வறுமையின் கொடுமை அந்தக் குழந்தையை இளமையிலேயே வாட்டி வதைத்திருந்தது. ஒரு நாள் பசியின் கொடுமை தாங்காமல் குப்பைத்தொட்டியில் கிடந்த ஒரு தோல் உரித்த வாழைப்பழத்தை எடுத்து, கழுவி ருசித்து சாப்பிட்டது அந்த குழந்தை. அப்படிப்பட்ட வறுமையிலிருந்து மெல்ல திணறி, முயற்சி செய்து மேலே ஏறி கல்வி கற்க வரும் ஓரு எளிய மாணவனுக்கோ / மாணவிக்கோ ஏது சிறப்பரிமை? அப்படிப்பட்ட மாணவ / மாணவி முதலில் கடலில் குதித்து விடுவாள். கரையேறி ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிடும், வெற்றி பெறுவாள். எனக்கும், என்னுடன் வாதாடிய மாணவர்களுக்கும் இருந்த சிறப்பரிமையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் இப்படி சிந்திக்க முடியும். “உண்மையான திறமை”, “பயிற்சியற்ற இயற்கையான திறன்” என்றெல்லாம் எங்களால் மணிக்கணக்காக விவாதிக்க முடியும். இந்த விவாதங்களில் ஒரு பொருளுமில்லை. இந்த விவாதத்தின் கதகதப்பில் நாங்கள் நேரங்கடத்திக்கொண்டிருக்கையில், எங்கோ வறுமையில், வெறியோடு தவித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன் / மாணவி தன் உயிரை பணையம் வைத்து முயற்சி செய்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

Comments

Popular posts from this blog

Social distancing…..you must be kidding me

Pride Month Guest Post - Being Visibly Queer in a medical college.

My Teacher